search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயிலை கவிழ்க்க சதி"

    தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இரவு 11.30 மணி அளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியை ரெயில் கடந்தது.

    அப்போது ரெயில் என்ஜின் பெரிய கல் மீது மோதுவது போன்ற பலத்த சத்தம் கேட்டது. இருப்பினும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தவில்லை.

    இதுதொடர்பாக என்ஜின் டிரைவர் திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து சென்று சிவரக்கோட்டை தண்டவாள பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் கற்கள் சுக்குநூறாக சிதறி கிடந்தது. விசாரணையில் மர்ம நபர்கள் வேலிக்கு போடும் 4 அடி நீளமுள்ள கல்லை தண்டவாளத்தின் நடுவே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

    ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லை வைத்து சதி செயலுக்கு முயன்றது யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    சில வாரங்களுக்கு முன்பு திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அப்போது திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ×